பாரியன்பன் நாகராஜன்

புதிர்

நானொரு கதை 

சொல்லத் தொடங்குகிறேன்.

சருகுகளையும் பூக்களையும் 

உதிர்த்து ஆவலாய் 

கதை கேட்கத் தொடங்குகிறது

மரம்.

 

கதையின் முடிவில் 

நல்லதொரு திருப்பமாய்

முடிச்சொன்றை வைத்து

புதிர்ப்போடுகிறேன்.

அதுவரை இல்லாத 

பெரும் புதிராய் ஒரு கிளையை 

முறித்துக் கொள்கிறது 

மரம்.

 

அத்துடன் கதையை 

நிறுத்திக் கொள்கிறேன்.

பெருமுடிச்சை அவிழ்த்து

முடிவு தெரிந்திடாத மரம்

பின்பொருநாள் ஒரு மழைக்காலத்தில்

அடைமழையிடம் என் கதையை

விடைகண்டறிய

சொல்லியிருக்கும் போல...

 

விடை தெரியாத அடைமழை

ஆற்றின் வழியே

கரைப் புரண்டோடும் 

வெள்ளத்தில் என்னைக் 

கொண்டு சேர்த்தது

கடலினிடத்தில்.

 

அவ்வமயம் விடைதெரியாத

மரத்தின் ஒரு முறிந்த கிளையும்

விடைதெரிந்த நானும்

எல்லாமும் தெரிந்து 

வைத்திருக்கும் பெருங்கடலில் 

கட்டுமரங்களாய்

மிதந்துக் கொண்டிருக்கிறோம்.

                                      - பாரியன்பன் நாகராஜன்   குடியாத்தம் 

பிப்ரவரி மாத வானவில் இதழில் இடம் பெற்ற கவிதை

Comments

Popular posts from this blog