கவிஞர் இளையவன் சிவா முக நூலில் எழுதிய நூல் அறிமுகம்
உயிருக்குள் தாகம்
தேவயானி / கவிதைத் தொகுப்பு / வெளியீடு செம்மை உடுமலை
முதல் பதிவு
செப்டம்பர் 2011 / இரண்டாம் பதிப்பு ஜனவரி 2024 / பக்கம் 80 / விலை ரூ 80
வளைக்கரங்கள் வாழ்வை நேசிக்கத் துவங்கினால் கலையின் வழியே
காட்சிகள் புலப்பட்டு அலையின் முயற்சி என கவிதைகள் விளைந்து மனதினை நிறைக்கும்.
மொழியின் மீதான நேசத்தின் நீட்சியில் உலகின்
வழிகளை ஒருங்கிணைத்து இயற்கையின் வளங்களை பாதுகாக்கும் எண்ணத்தை விதைக்கும் நேசச்
சொற்களின் அணிவகுப்பில் வந்து விழுகின்றன வார்த்தை அருவிகள்.
தமிழ் மீதான தணியாத காதலை தன்னம்பிக்கை நிறைத்து தரணியை ஆண்டிட இன்னொரு
பிறப்பெடுக்க வைக்கும் ஆசையின் தூண்டலை இல்லறத்தை நல்லறமாக்கிடத் துடிக்கும்
இளமையின் எண்ணங்களை நாளும் பொழுதும் நிம்மதி கூட்டும் நிலாவின் முற்றத்தை தன்னை
வளர்த்தெடுத்த நதியின் வாழ்க்கைப் போக்கை இயற்கை மீதான நேசத்தை என உயிருக்குள்
ஊற்றெடுக்கும் கணக்கற்றும் தீர்க்க இயலாமலும் பொங்கும் தாகத்தை நமக்குள் கடத்தி
அழகு பார்க்கிறது நூல்.
நெருக்குதலும் புறத்தூண்டலும் தீண்டியும் தூண்டியும் தோண்டியும்
வலுக்கட்டாயமாக பிறந்திடும் வார்த்தை சிதறல்கள் அல்ல அரும்பின் புன்னகையால் மலரென
மகிழும் செடியின் வாழ்வைப் போல விடியும் கதிரவனின் வரவைக் கண்டு வெளிச்சம்
கூட்டும் வானத்தின் நீள் பரப்பைப் போல பொதுவுடமை கருத்துக்களும் புரட்சி
எண்ணங்களும் இயற்கையின் பசுமையும் கலந்திட்ட வரிகளில் நமக்கான தாகத்தை தீர்த்திட
வளர்கிறது உயிருக்குள் தாகம்.
காஷ்மீர் பற்றிய கண்ணீர்க் கவிதையில் "என்னை கடந்து செல்லும்
மேகங்கள் குருதிக்கரை படிந்து விடும் என்று கொசுவம் தூக்கி நடந்து
செல்கின்றன" என்று
சொற்பிரவாகத்தை கண்டு மனம் ஆச்சரியமடைகிறது. கரை படியாமல் கொசுவம் தூக்கி நடந்து
செல்லும் மேகங்களை நாமும் அழகோடு ரசித்துப் பார்க்கிறோம்.
பிரதிகள் என்ற தலைப்பிலான கவிதையில்
"இருபதைக்
கடந்தால்
இளமையின்
மரணம்
சாதிகளின்
உரசலில்
காதலின் மரணம்
கல்லாதவன்
கையில்
புத்தகம்
மரணம்
இல்லாதவன்
வாழ்வில்
வாழ்வே
மரணம்"
அருமையான
வரிகளை எழுதிச் சென்று இருக்கிறார்.
நச்சுக்களை களையெடுக்க நம்பிக்கையை வளர்த்து நாளும் பொழுதும்
உழைப்பை கைபிடித்து உறக்கத்தைத் தொலைத்தால் மட்டுமே நன்மைகள் விளையும் என்று
நம்பிக்கை விதைக்கிறது தூக்கம் தொலைத்திரு கவிதை.
நூலின் ஆகச்சிறந்த கவிதையாக எழுதப்பட்டிருக்கிறது எழுதாத
விண்ணப்பம் கவிதை. திருமணம் ஆகும் கனவில் எதிர்பார்ப்பை கொட்டி வருங்கால கணவனுக்கு
பெண் எழுதும் விண்ணப்பம் அவளின் எண்ணங்களையும் அருமையாக எடுத்தியம்பி உள்ளது.
கணவனாக வரப்போகும் கணவானுக்கு கற்பனைகளின் சிறகடித்து இல்லறத்தை எதிர்பார்க்கும்
இளமையின் ஊஞ்சலில் இளைப்பாறும் மங்கையின் விண்ணப்பத்தை எல்லா ஆண்களும் அவசியம்
வாசித்திட்டால் பாலியல் தொல்லைகள் பவனி வராது பெண்ணின் உடல் மீதான சமூகத்தின்
போகப் பார்வை மங்கிப் போய் விடும். நல் வாழ்வில் நுழையும் மணமக்களுக்கான உறுதிமொழிப் பத்திரமாகவும் இதை
ஒப்பந்த சரத்தாக்கி விடலாம்.
"" தூறலில் தொடங்கி
பிரவாகத்தில்
மூழ்கடி
விரல்களால்
மேவி
என்னை
வீணையாக்கி விடு
வேருக்குள்
பரவும்
நீர் போல் ஓர்
நிதானம் கொள்
என் மார்பை
பார்க்கும்
கண்களால்
மனதையும் பார்
என்
வேதனை
இரவுகளில்
என்னுடன்
மருந்து பூசி
நீ மங்கல நாண்
பூட்டு முன்பே
மனதுக்குள்
மருட்சி “"
என்று
அருமையான சொல்லாடல்களுடன் இளமங்கையின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தி இருக்கும் அழகே அழகு.
பிறக்கும் பன மனிதர்கள் எல்லாம் சிறப்பின் பெருமை சொல்வதில்லை. சிறப்பால் வாழும்
சிலையெல்லாம் உளியின் செதுக்கல்களை உதாசீனப்படுத்துவதில்லை. அழுத்தங்களை
உள்வாங்கும் மனங்களுக்குள் தெய்வீகம் பிறந்திடும். சிற்பியைத் தேடும் கல் கொண்டே
எழுதிய கவிதையில் நம்பிக்கை விதைக்கிறது நற்பொழுதேகளை விடியல் ஆக்கிட.
"” மனங்கள் செதுக்கப்பட்ட
மானிடங்கள் யாவும்
தெய்வீக சிற்பங்கள்
மற்றவை எல்லாம்
வெறும் கற்கள் தான்""
அமராவதி
நதியின் வனப்பை கண் கொண்டும் நடக்கும் அழகை வாழ்வென்றும் நாகரீகம் வளர்த்திட்ட
நீரின் போக்கை நாளும் கண்ணுறும் மனதில் நசிந்து போன ஆற்றின் தடயங்கள் எழுப்பிடும்
வேதனையை விவரிக்கிறது நதியின் கவிதை.
கல்வியின் இன்றைய அவலத்தை குருவிடம் கொட்டித் தீர்க்கும் மாணவனின்
மனநிலையை படம் பிடிக்கிறது ஆசிரியர் தினம் கவிதை . பாமியன் மலைத்தொடரில் புத்தரின்
சிற்பங்களை சிதைத்த போது எழுதப்பட்ட கவிதை அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடும்
அவல நிலைக்கு உள்ளான மனிதர்களின் கவிதை வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் இறுதி ஊர்வலத்தை
காணாது அலையும் அவலம் என இவருக்குள் ஊற்றெடுக்கும் சமூகத்தின் மீதான பார்வைகள்
அருமையான கவிதைகளாக மலர்ந்து இதழை அணி செய்கின்றன.
தனக்கான உணர்வுகளை மதித்திடாமலும் புரிந்து
கொள்ளாமலும் இல்லற சிறைக்குள் அடைத்துவிட்ட இளைஞரிடம் பேசும் பெண்ணின் மனதாகம் உயிருக்குள்
தாகம் என எழுந்து நிற்கிறது.
பாட்டரங்கில் அரங்கேறிய கவிதைச்சரங்களை கவியரங்கங்களை நிறைத்திட்ட
உரை வீச்சுகளை கண் முன் கண்ட அனுபவங்களைத் திரட்டியும் காலத்தின் நகர்தலில் காணச்
சகிக்காத சமூகத்தின் கொடுமைகளை பொசுக்கிடத் துடிக்கும் வீரத்தின் வேகம் எனவும்
விளைந்திட்ட தொகுப்பின் வழியே இயற்கையை நேசிக்கும் மனங்களை உருவாக்குவதன் அவசியம்
உணரப்படுகிறது.
.jpg)
Comments
Post a Comment