இளையவன் சிவா கவிதை

1

எரியும் கூட்டுக்குள்

சிசுக்கள் கதறிட

கருகும் வீடெங்கும்

கதறல் நீண்டுவர

தப்பாத இலக்குகளில்

குண்டு மழை பெருக

பறவைகளின் வழித்தடத்தில்

ஏவுகணைகள் திசை நிரப்ப

காணும் உயிர்களையே

மண்ணும் புழுவெனவே

துப்பாக்கிகள் தோள் உயர்த்த

நிலையற்றதில் நிலைத்திட்ட

மரணத்தைக் கண்ணுறா

பேராசை மனதில்

பெருமூச்சுக்கும் வழியற்று

பிதற்றவும் முடியாமல்

சுருண்டு விடுகிறது மனிதம்

2

அனுபவங்கள் தீட்டித் தீட்டி

அகமெலாம் ஒளிவீசிட

நில்லாத வாழ்வின் பாடம்

நடத்திடும் தேர்வின் வழியே

பாதைகள் திறந்திடும்போதும்

பயணங்கள் தொடர்ந்திடும்போதும்

ஆசையின் ஊஞ்சலிலே

ஆடிடும் எண்ணமதை

ஏடென்றும் எழுத்தென்றும்

வடித்திடும் காவியத்தில்

நிலைத்திடட்டும் நேசமும் நிம்மதியும்.

இளையவன் சிவா



வானவில் மின் இதழ் பிப்ரவரி 2024  இதழில் இடம்பெற்ற கவிதை


Comments

Popular posts from this blog