நூல் அறிமுகம்
அறிமுகம் : தா.தெய்வானை
ஒரு கவிஞனின் மனதுக்குத் தான் இயற்கைக் கொடுத்த எல்லாப் பொருட்களும் அழகாகத் தோன்றும்.
கடல் அலைகளை மற்றவர்கள் இரைச்சல் என்பார்கள் கவிஞர் இளையவன் சிவா அந்த இரைச்சலை இசை
என்கிறார். அது கடலின் கனவு என்கிறார். அதுவும் தீராதக் கனவு என்கிறார். எந்த உலகம்
உள்ளவரை கடல் இருக்கும் ஆழ்கடலில் புதைந்த பொருட்களைப் போல மனிதனின் மனதுக்குள்ளும்
ஆயிரமாயிரம் எண்ணங்கள் புதைந்திருக்கும் அந்த எண்ணக் கனவுகளைக் கடல் அலையின் சங்கீதம்
போல கவிதைகளாய் பதிவு செய்திருக்கிறார்.
'வீடுகளில் எல்லா அப்பாக்களுக்கும் அம்மாக்கள் சற்று மட்டம் தான்... எத்தனை
வேலைகளை உதவிகளை செய்தாலும் பாராட்டு பெற முடிவதில்லை'. எதார்த்தமான
வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய முதல் கவிதையே நெஞ்சில் இசை பாடிக் கொண்டிருக்கிறது.
மனித வாழ்வில் சரி புற்று ஒரு பறவையாய் மாறி சுதந்திரத்தை அனுபவிக்க என்னும் ஒரு
மனிதனின் கற்பனை அதிகமானது அந்த கற்பனையிலும் இடி விழுந்தது போல்
' இன்னும் மிச்சம் இருக்கும் மனித தன்மையை எச்சம் என கைவிட்டப் பின்
இணையோடு கூட்டில் இளைப்பாற நினைக்கையில் எம்மை சுற்றி வளைத்தது ராட்சசன் இரும்புக்
கை
எட்டு வழிச் சாலை'
இதை வாசிக்கும் போது சாலையோர மரங்கள் வெட்டப்படும் போது எத்தனை பறவைகள் கூடிழந்து
குஞ்சுகள் இழந்து தவித்தனவோ என உருக வைக்கிறார்.
நூலகத்தில் தஞ்சமடையும் விலங்குகளை பற்றிய கவிதையில் ஒரு பாடம் கற்கிறோம். விலங்குகளின்
உலகத்திற்கு நுழைந்தால் அவைகளிடம் மனித வாசம் வீசுகிறதென்றால் மனிதன் நூலகத்தில் நுழைந்தால்
அவன் மனம் எப்படி பக்குவப்படும்?
'சுடுகாட்டின் வழியெங்கும் பிணங்கள் விதைக்கின்றன வாசனையோடு மலர்களை'
என்று எழுதி பிணங்களே பாதையை மலர் தூவி அலங்கரிக்கும் போது உயிரோடு இருக்கும் நாம்
எத்தனை அழகாக வைத்திருக்க வேண்டும்?
'காலத்தை விதைத்தவளிடம் வாங்கிய உணர்வை
கரம் பிடித்தவளிடம்
ஒப்புவித்து இளைப்பாறுகிறேன்.'
இவை மனித மனங்களை குருவும் வரிகள். காதலிக்காத இதயங்கள் இல்லை. காதலித்தவர்களை
கைப்பிடிக்க முடியாத போது கைப்பிடித்தவளிடம் உண்மையாக வாழ்ந்தால் நிம்மதியாக வாழலாம்
என்ற தாரக மந்திரத்தை சொல்லிக் கொடுக்கிறார்.
'ஐவகை நிலங்களை அடையாளப்படுத்தும்
வீட்டு பாட வினாவிற்கான விடை தேடி
முனங்கிக் கொண்டிருக்கிறான் அடுத்தகத்தின் ஏழாவது மாடியில்
அடைக்கப்பட்ட கதவுக்குள் சிறுவன்.'
ஒரு காலத்தில் மண்ணில் வீடு கட்டி, கூட்டாஞ்சோறு ஆக்கி, பாண்டி விளையாடி, மண்ணில் பிறந்து விளையாடிய குழந்தைகளுக்கு மண்ணின் வகைகள் தெரியும். இப்போதெல்லாம்
குழந்தைகள் மண்ணையே கண்ணில் பார்ப்பதில்லை. வீட்டில் சிமெண்ட், வாசலில் மஞ்சள் நிற பள்ளிப்பேருந்து ஏறி பள்ளிக்கூடத்தின் சிமெண்ட் வாசலில்
இறங்குகின்றன. ஐவகை நிலங்களின் வினாக்களுக்கு எப்படி விடை எழுதுவான் அந்த நிலமறியாக்
குழந்தை?
'வலை வீசினாலும்
அள்ளித்தருகிறது வாழ்வை குழாய்ப்பதித்தாலும்
நீரமுதத்தை தாளமிட்டு உயிரை நீட்டித்தருகிறது...'
எவ்வளவு பயன் தருகிறது குளங்கள். அப்படிப்பட்ட குளங்களிளெல்லாம் குப்பையைக் கொட்டி
வீடுகளைக் கட்டி நீராதாரத்தையே பாழடிக்கிறார்கள். ஆதங்கப்படுகிறார் கவிஞர்.
'எனை வளர்த்த தோட்டத்தை கல்நட்டுக் கம்பி வேலியிட்டு சிறைப்படுத்தியப் பின்
கண்ணீர் வடிக்கிறது மண்ணின் மூச்சு.'
எனது இடம் உனது இடம் என்று இல்லாமல் எல்லாம் நமது இடம் என்று நம் முன்னோர்கள் வாழ்ந்த
காலம் கண்முன் வந்து போகிறது. சின்ன சின்ன இடங்களுக்கு கூட கம்பி வேலி இட்டு பூமியை
சிறைப்படுத்தி, சில சமயங்களில் மின்சாரம் கூட பாய விட்டு உயிர்
பலி கொடுத்து அப்பப்பா... மண் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்யும்?
'கைபேசிகள் காலமறியாது கதறிய படி கிடக்க
ஒரே வீட்டின்
அறைகள் வேறாகக் கண்ணுற்றுக் கிடைக்கிறோம் முகநூலின் வழியே
வளரும் நம் வாரிசுகளை'
தற்கால குழந்தைகள் சதா நேரமும் அலைபேசியும் கையுமாய் வளர்ந்து வருவதை சுருக்கென்று
தைத்தாற்போல் கூறியுள்ளார்.
ஒரு கவிதை எனக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.
'சிங்கத்தின் வேட்டை முடிந்ததுமே இயல்புக்கு வருகின்றன
மான் கூட்டம்
புலியின் இரையாடல்
புயலென விலகியதும் புற்களை மேய்கின்றன வரிக் குதிரைகள்
................. ஆபத்தின் கூடாரத்தினுள் ஆறறிவு மனிதனைப்
போல் அதிர்வதில்லை வனம்.'
மனிதர்களும் சிங்கம் புலி போல் வேட்டையாடும் மனிதர்கள் வாழ்கிறார்கள். இரையாகி
போன மனிதர்களைப் பற்றி எந்த கவலையும் படாமல் எந்த அதிர்வும் இல்லாமல்தான் ஆறறிவு மனிதன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
'பால்யத்தில் என்னை உயிர்ப்பித்த நதி
நீர்ச்சங்கிலி பிளவுண்டு மணல் வயிறை விரித்தபடி பாலைவனத்தின் தலைப்பிள்ளையென
மரணித்து கிடக்கிறது'
வரலாறு கண்டிட்ட ஆறுகள் யாவும் இன்று வாழாவெட்டி ஆகி போய்விட்ட வருத்தம் கவிஞர்
சொற்களில் வலியாகி வழிகிறது. ஆனால், அங்கு நதி காய்ந்தபின் மனிதர்கள் மணலை கூட விட்டு வைப்பதில்லையே!
'உச்சிக் கிளை
துளிர்க்கும் நிலை
...............................'
இக்கவிதையில் உச்சக்கிளையின் மூலம் வெளிப்படும் அழகியலை வரிசையாக வர்ணித்து வரும்போது
மனதில் ஓர் ஆனந்த துள்ளல் ஏற்படுகிறது. ஆனால் கவிதையின் கடைசி வரியில்,
'குச்சிகளை
தொங்கும் உழவன்
விரட்டும் கடன்'
என்று முடித்து இந்தச் சமூக அவலத்தைத் தொட்டு நம்மை கண்ணீர் விட வைக்கிறார்.
'பிரம்மாண்ட தரிசனம் ஜொலிக்கும் கோபுரம்
........................................ ஆயினும் என்ன
ஆலய வாசலில்
கையில் திருவோடு'
கோயில்களில் உள்ளே எத்தனை சாமிகள், எத்தனை அலங்காரங்கள், தரிசனங்களுக்காகவும் உண்டியலுக்காகவும்
மக்கள் செலவிடும் பணம். ஆயினும் என்ன? இவையாவும் வாசலில் திருவோடு
தாங்கி நிற்கும் பிச்சைக்காரணைக் கடந்து போய்த்தானே நடக்கிறது.
நீண்டதொரு சிந்தனைச் சங்கிலியை நம் மனதில் கோர்த்துவிட்டுச் செல்கிறார் கவிஞர்
இளையவன் சிவா.
இவ்வாறு தொடர்ச்சியாக சமூக ஆய்வோடுக் கூடிய கவிதைகள் நீண்டு கிடக்கின்றன. சமுதாயத்தில்
வாழ்க்கை நடத்தும் நாம் கவிதைகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். எதிர்காலத்தில்
தமிழர் உதடுகளில் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு கவிஞரின் பெயராக இளையவன் சிவா வலம் வருவார்
என்பது நிச்சயம்.
---------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment