மௌனங்களை உடைப்போம்

 யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்து இருந்தால்?

             இந்த வாக்கியத்திற்கான பொருள் என்ன என்று யோசனை வருகிறது அல்லவா? இது ஒரு சிறிய நூலின் தலைப்பு. சிறிய நூல் என்றாலும் இதனுடைய  பேசுபொருள் மிக மிகக் கனமானது. 

      குழந்தைகளும் சின்னஞ்சிறு மனிதர்கள் தான். அவர்களுக்கும் அவர்களது உடல் , மனம் குறித்த அடிப்படை உரிமை  இருக்கிறது. பட்டாம்பூச்சிகள் போன்ற குழந்தைகளைக் கசக்கி, தகாத உறவுகளுக்குள் ஆட்படுத்தும் கண்ணியமற்ற ஒரு செயலான, பாலியல் கொடுமைகளைப் பற்றி தான் இந்த நூல் பேசுகிறது. 

        இணைய கூட்டங்களில் இந்த நூலைப் பற்றி நான் பேசிய பிறகு, என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், நான் அதிகம் பேசி பழக்கம் இல்லாத நட்புகள் என்று  சில நண்பர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. 

        கிட்டத்தட்ட அனைவரிடமும் யாரிடமும் சொல்லப்படாத, ஒருவருக்கும் தெரிந்து விடக்கூடாது என மனதிற்குள் பல ஆண்டுகளாக.. ஒரு கெட்ட கனவாக மறைத்து  வைக்கப்பட்டிருந்த கதை ஒன்று இருந்தது.. அதை வெளிப்படுத்த முடியாமல் இத்தனை ஆண்டுகள் மௌனமாய், வலியோடு  கடந்து வந்திருக்கிறார்கள். இந்த நூலைப் பற்றிய உரை அவர்களின் மௌனத்தைத் தகர்த்து , என்னிடம் உரையாட வைத்தது. உரையாடலுக்குப் பிறகு அவர்கள் மனம் ஒருவாறு ஆசுவாசமடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.  அவர்களுடைய பேச்சைக்  கேட்க என் காதுகளை மட்டும் கொடுத்தேன் அவ்வளவுதான்..

 2017 ஆம் ஆண்டு வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற ஒரு தொண்டு நிறுவனம், இந்தியாவில் 26 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் சராசரியாக இரண்டில் ஒரு குழந்தை சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஏதாவது ஒரு வகையில் உட்படுத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கேட்கவே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது தானே?.. ஏன் இது போன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு நடக்கிறதுஇதுபோன்ற கொடுமையான செயல்களை வெளிப்படுத்தாமல் மூடி மறைத்து கனத்த மவுனத்தோடு தொடரும் நம் பண்பாடு , கலாச்சாரம் என்ற நடைமுறைகள் தான் மிக முக்கிய காரணம்.  

           பெண் குழந்தைகள் மட்டுமல்ல பெரும்பாலான ஆண் குழந்தைகளும் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.  ஆண் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களை விடப் பெரிய சிறுவர்களால், ஹாஸ்டல்களில், வயது முதிர்ந்த ஆண்களால், மூத்த வயது பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.    

        பெரும்பாலும்  80% இந்த பாலியல் குற்றங்கள் , வெளி நபர்களால் நடத்தப்படுவது இல்லை. குழந்தைகளுடைய நெருங்கிய உறவினர்களால், பெற்றோர்களின் நட்பு வட்டத்தில் உள்ள நபர்களால், அருகமை வீட்டுக்காரர்களால் தான் அதிகம் நிகழ்த்தப்படுகிறது. இது அந்த குழந்தைக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். 

   தன்னுடைய பாலியல் இச்சைக்கு குழந்தைகளை உட்படுத்தும்  வக்கிர புத்தி கொண்டவர்கள் முதலில் பெற்றோர்களுடைய நம்பிக்கையைப் பெற்று குழந்தைகளுடன் அன்புடனும் பாசத்துடனும் இருப்பது போன்று இயல்பாய் பழகுவார்கள்.  மெல்ல மெல்ல வீட்டின் சூழ்நிலையை கிரகித்துக் கொண்டு, வீட்டில் குழந்தைக்கு எதெல்லாம் மறுக்கப்படுகிறதோ, அதை அன்போடு குழந்தைகளுக்கு பரிவோடு தருபவர்களைப் போல முதலில் நடந்து கொள்வார்கள். மெல்ல மெல்ல குழந்தைகளைத் தன் வசப்படுத்துவார்கள். பின்பு தான், மெல்ல மெல்ல தன் வக்கிர  புத்தியைக் கட்டவிழ்த்து விடத் தொடங்குவார்கள். 

      குழந்தைக்கு முதலில் மிகப்பெரிய குழப்பம் வரும். மிக மிக அன்பானவர் ஏன் இப்படிச் செய்கிறார்? இதை வீட்டில் உள்ளவர்களிடம் வெளிப்படுத்தலாமா? வெளிப்படுத்தினால் நம்மை நம்புவார்களா? அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கும் காரணம் தான் தான்  என்று குற்றம் சாட்டப்படுவோமா என்றெல்லாம் பயமும் ,குழப்பமும் அடைந்து, மெல்ல மெல்ல ஒரு மௌனத்திற்குள் ஆட்பட்டு, காலம் முழுவதும், தீராத ஒரு ரணத்தோடு வாழ்வார்கள். 

       இதை சரி செய்ய அந்த உறவுகளைத் தேடித்தேடி நாம் திருத்த முடியாது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் குழந்தையின் மொழியில் வீட்டிலும் பள்ளியிலும், வெளிப்படையான மனம் திறந்த உரையாடல்கள் நிகழ்த்த வேண்டியது மட்டும் தான். 

        வீடுகள் பள்ளிகள் போன்றவற்றில் , பாலியல் வன்கொடுமைகளால் சில குழந்தைகள் இறந்த தகவல்கள் வெளியான பின்பு, நல்ல தொடுதல்கெட்ட  தொடுதல் என்பதைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் ஒரு குழந்தைக்கு தன் உடலைப் பற்றியும், உடல் உறுப்புகளை பற்றியும் ,அதன் செயல்பாடுகளைப் பற்றியும் வெளிப்படையாக சொல்லிக் கொடுத்திருக்கிறோமா

         குழந்தைகளுக்கு உடல் உறுப்பை பற்றி சொல்லிக் கொடுக்கும் பொழுது, பாலுறுப்பை பற்றி மட்டும் எதுவும் சொல்வதில்லை. பாலுறுப்புகளைப் பற்றி வெளியில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளோ, அல்லது ஒரு செல்லப் பெயர் வைத்தோ சொல்லிவிடுகிறோம். முதலில் அதை உடைத்து அனைத்து உறுப்புகளை போல பாலுறுப்பை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். 

      குழந்தை ஆடையின்றி விளையாடும் போது கேலி செய்யாமல், உள்ளாடை அணிவதன் காரணத்தைத் தெளிவாக விளக்க வேண்டும். நாம் தயக்கமும் கூச்சமும்  இன்றி அவர்களிடம் பேசினால் தான், பின் நாட்களில் குழந்தைகள் தங்களுடைய சந்தேகங்களை வெளிப்படையாக பெற்றோர்களிடம் கேட்டுப் போக்கிக் கொள்வார்கள்.

         அப்படி நாம் அந்த சந்தேகங்களை போக்க தவறினால், தகவல்களைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு கையடக்க  வில்லன் ஒருவன் இருக்கிறான். அவர்களுக்கு தேவையோ இல்லையோ அனைத்தையும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள இணையம் இன்று அவர்களுக்கு கடலளவு விவரங்களை கொட்டி வைத்திருக்கிறது.. அதில் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்த விளைந்தால் அவர்களின் வாழ்க்கை அவ்வளவுதான்....கண்ணியமாக ஏன் நாமே குழந்தைகளுக்கு சொல்லித் தரக்கூடாது?.. வெளிப்படையாக பேசும் பொழுது தான் குழந்தைகளுக்கு பால் உறுப்புகளை பற்றி பாலுணர்வு பற்றி மரியாதையான ஒரு உணர்வு தோன்றும். 

இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் என்பதை ஓரளவு  சொல்லிக் கொடுக்கிறோம். மகிழ்ச்சியான ஒன்று தான்.

 இன்னும் சில விஷயங்களை நம் குழந்தைகளுக்கு வெளிப்படையாக நாம் சொல்லித் தர வேண்டும்.

*குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, பிடிப்பது தவறு.

* பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர் தன் அந்தரங்க உறுப்புகளை குழந்தைகளிடம் காட்டுவதும் தவறு. 

வலுக்கட்டாயமாக யாரும் முத்தமிடுவது கூடாது.

* குழந்தையை நிர்வாணமாக புகைப்படம் எடுப்பது.

* கைபேசிகளில் பாலியல் வீடியோக்களை காட்டி கிளர்ச்சி அடைய செய்வது.

* பாலியல் செயல்களை பார்க்க குழந்தைகளை ஊக்குவிப்பது தவறு..

என்பன போன்ற விஷயங்களை தெளிவாக குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து இதுபோன்ற விஷயங்களை யாராவது உங்களிடம் முயற்சிக்கிறார்களாஎன்பதை கேட்டு அறிய வேண்டும்.

       பயத்தினால் வெளிப்படுத்தாத குழந்தைகள் நாம் கேட்கும் பொழுது தான் தங்களுக்கு நடந்ததை வெளிப்படுத்துவார்கள். இப்படி ஏதேனும் ஒன்று அவர்களுக்கு நடந்திருந்தால் அதை மிகப் பெரிய பிரச்சனை போல் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால்  அவர்கள் குற்ற உணர்வுக்கு ஆளாவார்கள். அதை விடுத்து இது போன்ற விஷயங்களை நாங்களும் சிறு வயதில் கடந்து வந்திருக்கிறோம் என்று கூறும்பொழுது, பெற்றோர்களின் மீது நம்பிக்கை வைத்து அனைத்தையும் பகிர்வார்கள். 

        Good touch , bad touch  என்பதோடு don't touch என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். யாராவது ஒருவர் குழந்தையை அத்துமீறி தொட முயன்றால், தொடாதே என்பதை பலமாக கத்த  வலியுறுத்த வேண்டும்..( shout ) . பிறகு  பயந்து அங்கேயே நின்று விடாமல், வெகு வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட வேண்டும் . ( Run)

   நடந்ததை பெற்றோர்களிடமோ பாதுகாவலர்களிடமோ உடனடியாகச் சொல்ல வேண்டும். ( Tell ) 

 

இந்த மூன்று விதிமுறைகளையும், அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழும் போது கடைபிடிக்க குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். 

            எல்லாவற்றையும் நண்பர்களைப் போல நாம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டால் , அவர்களும் தங்களுடைய வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். இல்லையென்றால் இது போன்ற துஷ்பிரயோகங்களை வெளியே சொல்லாமல் காலம் முழுக்க ஆறாத வடுவோடு வாழ்வார்கள்.  இதனால் பிற்காலத்தில் அவர்களுடைய இல்லற வாழ்வும் கூட பாதிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

     வளர் இளம் பருவக் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தேவை என்று ஒரு சாராரும்.. பாலியல் கல்வியால் அவர்கள் கெட்டு விடுவார்கள் என்று ஒரு சாராரும் வாதிக்கிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம் உலகில் பல நாடுகளில் இதை ஆய்வு செய்து, பள்ளிப் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி அளித்தால் அவர்கள் பொறுப்புணர்வுடன் பாலியல் விஷயங்களில் இருப்பார்கள் என்பதை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இள வயதிலேயே உடலுறவு கொள்வதை, இளம் வயது கர்ப்பங்களை, பாலியல் உறவு மூலம் பரவும் வியாதிகள் போன்றவற்றை பின் நாட்களில் கட்டுப்படுத்த முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

          பாலியல் கல்வியை முறையாக சொல்லிக் கொடுக்கும் பொழுது , பின்னாட்களில்  நம் குழந்தைகள் ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ ஏதுவாக இருக்கும். எனவே பெற்றோர்களாகிய ஆசிரியர்களாகிய நாம் நமது மன தடைகளை , மௌனத்தை உடைத்துகுழந்தைகளுக்கு  பாலியல் அறிவை சொல்லிக் கொடுக்க வேண்டும்..

மௌனங்களை உடைப்போம்.


வானவில் ஆண்டுவிழா மலரில் கதைசொல்லி பூங்கொடி பாலமுருகன் எழுதியுள்ளகட்டுரை 

Comments

Popular posts from this blog